Saturday, March 31, 2012

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்


தேள்


உலகில் 50 டிகிரி வட அக்ஷய ரேகைக்கு மேலும் ந்யூசிலாந்திலும், அன்டார்டிகாவிலும் தவிற மற்ற எல்லாப் பிரதேசங்களிலும் காணப் படும் ஒர் உயிரினம் தேள். இது சாதாரணமாக 20 டிகிரியிலிருந்து 67 டிகிரி செல்சிஸ் உஷ்ணம் வரை உள்ள பிரதேசங்களில் வாழ்கிறது. இமய மலைத் தொடரில் காணப் படும் தேள், தென் அமெரிகாவில் படகோனியா என்ற இடத்தில் காணப்படும் தேள், மற்றும் வட ஐரோபாவில் காணப்படும் தேள் இவை -25 டிகிரி செல்சியஸ் வரை தாங்கக் கூடியவை.

தேள் ஒரு எட்டுக் கால் பூச்சி. எட்டுக்கால் பூச்சிக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் இதன் கொடுக்கு.

Inline image 9

Inline image 8


தேள், எட்டுக்கால் பூச்சி இவற்றின் இனத்திற்கான ஆங்கிலப் பெயர் ஆர்த்ரொபோட்ஸ், (Arthropods) அதாவது ஒட்டுகள் கொண்ட கால் பூச்சி (Insects with jointed feet). இவ்வகைப் பூச்சிகளுக்கு அவற்றின் கடினமான தோல் தான் எலும்புக் கூடு. உடலும் துண்டுகளால் ஆனது.

தேளின் எலும்புக் கூடு அதன் தோல்தான். இந்தக் கடினமான எலும்புக் கூடு அதன் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதால் நாம் சட்டையைக் கழற்றுவது போல் அவ்வப்போது தோலை உரித்துக் கொண்டு அதிலிருந்து வெளியேறி விடும். அப்படி வெளியேறும் தேளின் தோல் மிகவும் மென்மையாக இருக்கும். பின்னார் மெல்ல மெல்ல கடினமாகிவிடும்.

1940 களில் ஒரு நவராத்திரியின் போது பரணில் இருந்த பெட்டியிலிருந்து பொம்மைகளை எடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு பெரிய நாய் பொம்மையை எடுத்தபோது அடிப் பக்கம் இருந்த வலது கையில் என்னவோ பசக் என்றது. பொம்மையைக் கீழே போட்டு விடாமல் மெதுவாகக் கீழ் இறக்கிப் பார்த்தால் என் கையில் சட்னியாய் ஒரு பெரிய தேள் வெள்ளை நிறத்தில்! தேள் வெள்ளை நிறத்திலா என்கிறீர்களா? அப்போது தான் தோல் உரித்த தேள், அதுவும் வெளிச்சம் துளியும் இன்றி மரப் பெட்டிக்குள் இருந்ததால் அந்த வெள்ளை நிறம். பொம்மைப் பெட்டியில் அந்தத் தேள் சற்றும் முன் கழற்றிப் போட்ட அதன் சட்டை!

தேளின் தோலுக்கு ஒரு தனிக் குணம் அது குறுகிய நீல ஒளியில் (Near Ultra Violet rays) நீலப் பச்சை நிறத்தில் தோன்றும். (ராமர் பச்சை என்று பெண்கள் புடவைகள் பற்றிப் பேசும்போது சொல்வார்களே அந்த நிறம்)

Inline image 7

http://www.desertusa.com/oct96/Scorp_uv.jpg

இரவில் தேளைத் தேடியோ அல்லது வேறு எதாவதொரு நோக்கத்துடனோ காடுகளில் செல்பவர்கள் கையில் கருப்பு விளக்கு என்று சொல்லப் படும் ஒரு வகை குறுகிய நீல வெளிச்ச விளக்கினை எடுத்துச் செல்வார்கள். (Black light or Woods light என்பது இந்த விளக்கின் பெயர்)

தேள் எட்டுக் கால் பூச்சி போல முட்டை இடாது. வயிற்றில் உண்டாகும் முட்டைகளை அது (இரண்டு முதல் நூறு வரை இருக்கலாம், சாதாரணமாக எட்டு முதல் பத்து வரை), செதிள்கள் போன்றிருக்கும் தன் வயிற்றுப் பட்டைகள் ஒன்றின் அடியில் இருக்கும் பாலியல் உறுப்புக்குள்ளே வைத்திருக்கும். அவை குஞ்சுகளாக மாறியதும் ஒவ்வொன்றாக வெளி வந்து தாயின் மேல் எறி உட்கார்ந்து விமானம் தாங்கிக் கப்பல்களின் விமானங்கள் போல சவாரி செய்யும். சிலர் இதைத்தான் தவறாகப் புரிந்து கொண்டு, தேள் இனத்தில் தாய்க்குக் குஞ்சுகளே எமன் அவை வயிற்றைக் கிழித்துக் கொண்டு வருவதால்”, என்பார்கள்.

Inline image 6

http://en.wikipedia.org/wiki/File:Scorpionwithyoung.JPG

தேளின் மண வாழ்க்கை பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று. ஆண் தேள் தன் இனப் பெண் தேளினை, பட்டாம் பூச்சி போன்று அது வெளி விடும் வாசனை மூலம் கண்டு பிடித்து, தன் கைகளைப் பெண் தேளின் கைகளோடு கோத்துக் கொள்ளும். பின் அவை இரண்டுமாகச் சுற்றிச் சுற்றி வந்து ஒரு வகை நடனமாடும். (ஆங்கிலத்திலே வால்ட்ஸ் என்பார்களே அது போல). அப்போது வாயினால் பெண் தேளை அதன் வாயில் கடிப்பதும் சில சமயம் முரண்டு பிடிக்கும் பெண் தேளை அடக்குவதற்காக அதன் கைகளில் லேசாகக் கொட்டி சிறிதளவு விஷத்தினை ஏற்றுவதும் உண்டு.

தேள் நடனமாடுவது ஒரு உள் நோக்குடந்தான். உண்மையில் அது வெளிவிட இருக்கும் விந்துக்கள் கொண்ட பையினை தரையில் விட சரியான இடம் தேடுவதற்கும், பின் அவ்வாறு விடப் பட்ட விந்துப் பைகளின் மேல் பெண் தேளின் அடி வயிறு உரசும்படி இழுத்துச் செல்வதற்கும் தான். அப்படி அது செய்யும் போது, விந்துப் பைகள் கிழிந்து விந்துக்கள் பெண் தேளின் பாலியல் உறுப்புக்குள் சென்றடைகிறது. பெண் தேளும் கருவுற்று முட்டைகள் அதன் வயிற்றுக் குள்ளே உண்டாகிறது. அவற்றிலிருந்தே குஞ்சுகள் பின் வெளி வருகின்றன.

தேள் நாட்டியம்

Inline image 5

http://johnbokma.com/mexit/2008/03/01/scorpions-from-molcaxac-puebla-mating.jpg

தந்தை இல்லாமலே பிள்ளைகள் பெரும் தேள் வகைகளும் உள்ளன.

தேள் வாழ்வது கற்களுக்கடியிலும், இடுக்குகளிலும், பொந்துகளிலும், வீட்டில் உள்ள அடைசல்கள் இடையேவும், தென்னை போன்ற சில மரங்களிலும்தான்.

தேள் கொட்டும்போது உள்ளே செலுத்தப் படும் விஷம் சில பாம்புகளின் விஷம் போலவே நரம்பு மண்டலத்தைத் தாக்கக் கூடிய ஒரு விஷம். ஆனால் வீரியத்தில் பல மடங்கு குறைவானது. ஆனாலும் உலகில் தேள் கடித்து (கொட்டி) இறப்பவர்களின் எண்ணிக்கை பாம்பு கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். காரணம் மக்கள் அதிகம் நடமாடும் வயல் வெளிகளிலும் தரிசல் நிலங்களிலும் அதிக அளவில் தேள்கள் இருப்பதுதான்.

வட ஆப்பிரிக்கக் காடுகளிலும் மெக்சிகோவிலும் தான் உலகிலேயே அதிக அளவில் மனிதர்கள் தேள் கடியினால் இறப்பது நிகழ்கிறது.

வட ஆப்பிரிக்க நாடுகளிலும், மத்தியக் கிழக்குப் பிரதேசம் என்று அழைக்கப்படும் அரபு நாடுகளிலும் உள்ள (Death stalker) சாவு தேடி அலையும் தேள் தான் (தன் சாவைத் தேடி அல்ல) உலகிலேயே மிகக் கொடிய விஷம் கொண்ட தேள்.

Inline image 10

http://en.wikipedia.org/wiki/File:Deathstalker_ST_07.JPG

மனிதர்கள் உயிர் போக்கும் விஷம் கொண்ட தேள் வகை

(Leiurus quinquestriatus),

நம் நாட்டில். ஒருவரை பல முறைகள் கொட்டியதால் இறந்தவர்கள் உண்டு. கோயமுத்தூரில் சில ஆண்டுகளுக்கு முன் இறந்த பள்ளி மாணவி ஒர் உதாரணம்.

தேள் கொட்டினால் அதனால் உண்டாகும் வலி தேனீயோ குளவியோ கொட்டியதை விட சற்றே அதிகமாக இருக்கும்.

நம் இந்திய நாட்டில் சாதாரணமாக மூன்று வகைத் தேள்களைக் காணலாம். அவை நம் வீடுகளில் காணபடும் செம்பழுப்பு உடலும் சிறு கருப்பு முதுகையும் கொண்ட தேள், தென்னை மரத்தில் காணப்படும் செந்தேள் மற்றும் காடுகளிலும், கடப்பா மற்றும் குல்பர்கா ஜில்லாக்களில் அதிகமாகக் காணப்படும் நட்டுவாக்கிளி என்றழைக்கப் படும் பெரிய உருவம் கொண்ட கருப்புத் தேளும் ஆகும். இது தமிழ் நாட்டிலும் ஓரளவுக்கு உண்டு. ஹோசூர் அருகே ஒரு தடவை பார்த்திருக்கிறேன்.

ஒரு முறை கல்லூரி விடுமுறையின் போது குல்பர்காவில் இருந்த எனது பெற்றோர்களைக் காணச் சென்றேன். அவர்கள் குடி இருந்த வீடு கடப்பைக் கல் பலகைகளினால் கட்டப் பட்டது. அங்கு கழிப்பறையில் நம் ஊரில் கரப்பான் பூச்சிகள் நடமாடுவது போல சில நட்டுவாக்கிளிகள் நடமாடிக் கொண்டிருந்ததப் பார்த்த எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.


Inline image 11

http://en.wikipedia.org/wiki/File:Asian_forest_scorpion_in_Khao_Yai_National_Park.JPG

நட்டுவாக்கிளி



தேளின் உணவு பூச்சிகள், பாச்சை, கரப்பான் பூச்சி போன்றவை. தேள் யாருக்கு உணவு? பெரிய பூரான், பல்லி, ஓணான், பறவைகள், வௌவால், எலி இவற்றுக்குத் தேள் உணவு.

தேளை, கவனத்துடன் செயலில் இறங்கினால் உங்கள் கைகளாலேயே பிடிக்கலாம்.

தேள் சாதாரணமாக நடந்து கொண்டிருக்கும் போது கொடுக்கினைப் பக்க வாட்டில் தொங்கப் போட்டுக் கொண்டு நடக்கும். அதன் முன்னே ஒரு ஈர்க் குச்சியையோ, வைக்கோல் துண்டினையோ சிறிது ஆட்டினால் அது உடனே கொட்டத் தயாராகத் தன் கொடுக்கினைத் தூக்கி வட்டமாக வளைத்துப் பிடித்துக் கொண்டு அசையாமல் தயாராக நிற்கும். அப்போது மெல்ல பின் புறமிருந்து நெருங்கி கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் நடுவே கொடுக்கின் கடைசி மணி வருமாறு வைத்துக் கொண்டு விரல்களை கப்பென்று நெறுக்கித் தேளைப் பிடித்து விடலாம். ஆனால் பிடி கெட்டியாக இருக வேண்டும. பிடியை ஒரு போதும் தளர்த்தி விடக் கூடாது. தேள் உங்கள் விரல்களைக் கவ்வும். அதனால் ஒன்றும் ஆகாது. பின் தேளை உயிருடன் விட வேண்டும் என்றால் தூரத் தூக்கி எறிய வேண்டும். அல்லது கொல்ல வேண்டுமானால் தரையை நோக்கி ஓங்கி அடிக்க வேண்டும். இதில் சற்றும் நிதானம் கூடாது. நிதானம் காட்டினால் கொட்டு பட வேண்டி வரும்.

நான் பல முறை தேள்களைப் பிடித்திருக்கிறேன் மிகவும் அசௌகரியமான் இடங்களில் இருந்தும் கூட. உதாரணத்திற்கு ஒரு அடுப்புக் கரி வைத்திருந்த மண் எண்ணை டப்பாவின் உள்ளிருந்தும் கூடப் பிடித்திருக்கிறேன். ஆனாலும்............................

ஒரு முறை ஹைதராபதில் இருந்தபோது, பிடித்த தேள் குஞ்சினைக் கையில் வைத்துக் கொண்டு என் தைரியத்தை காலனி குழந்தைகள் முன்னே பறை சாற்ற எண்ணி அதை விட்டு விட்டுப் பிடித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் மனதில் ஒரு கேள்வி ஓடியது, தேள் கொட்டினால் வலி மிக அதிகமாக இருக்கும் என்கிறார்களே பலர். அது எப்படி இருக்கும்?” என்று. இப்படி நினைத்துக் கொண்டே ஒரு முறை பிடிக்கப் போன போது கனவுலகில் இருந்த என் விரலில் தேள் கொட்டி விட்டது. அடுத்த பத்து நாட்கள் அவஸ்தைப் பட்டேன் வலியுடன்.

தேள் கொட்டினால் என்ன செய்யலாம் அதற்கு வைத்தியமாக?

தேள் கடிக்கு மிக சுலபமான வைத்தியம் ஒன்று இருக்கிறது. தேள் கொட்டிய இடத்தில் முத்துப் போல ஒரு சிறு துளி நீர் கசிவதைப் பார்க்கலாம். அந்த இடத்தில் மூன்று நான்கு துகள்கள் பொட்டேசியம் பெர்மாங்கனேட்டையும், அதே அளவு டார்டாரிக் அமிலத் துகள்களையும் வைத்து ஒரு ஈர்க் குச்சியில் தண்ணீர் எடுத்து அந்த ரசாயனங்களின் மீது வைத்திட அது பொங்கிடும், கொட்டிய இடத்தில் மிக சூட்டுடன். கொஞ்ச நேரத்தில் தேள் கொட்டியதின் வலி மறந்து விடும்.

இந்த வைத்தியத்தினை எனது தந்தை செய்வார். இதையே அன்பர் சுப்ரமணியம் என்பவரும் எழுதி இருந்தார் முன்பு இதே கட்டுரையை பல் சுவையில் வைத்தியக் குறிப்பு எழுதாது பிரசுரித்திருந்த போது.

தேள்களை செல்லப் பிராணியாக வைத்துக் கொள்வோரும் சாதனை புரிவதற்கென்றே பல தேள்களுடன் ஒரு அறையில் பல மணி நேரங்களைக் கழிப்பவர்களும் இவ்வுலகில் உண்டு.

Inline image 1

http://newsimg.bbc.co.uk/media/images/45410000/jpg/_45410899_-20.jpg

காஞ்சனா கெடகேவ் என்ற இந்தத் தாய்லாந்து நாட்டுப் பெண் விஷமுள்ள சுமார் 5000 தேள்களுடன் 30 நாட்களுக்கு மேல் ஒரு அறையில் தங்கி உலக சாதனை புரிந்திருக்கிறார். இந்த சாதனையை அவர் புரியும் போது பதிமூன்று முறை தேள்களினால் கொட்டப்பட்டாராம். அவருக்கு அளிக்கப் பட்ட பட்டம் தேள் ராணி!”

01-04-2012 நடராஜன் கல்பட்டு

No comments:

Post a Comment