Saturday, March 31, 2012

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (41) உடும்பு

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (41) உடும்பு


Inline image 1

(உடும்பு - திருச்சி தஞ்சாவூர் சாலை அருகே 1975ல் எடுத்த படம்)

உடும்புப் பிடின்னு கேள்விப் பட்டிருப்பீங்களே. விடாது இறுக்கப் பிடித்துக் கொள்வதற்கு உடும்புப் பிடி என்று சொல்வதுண்டு. அப்படி என்ன விசேஷம் அந்த உடும்புப் பிடியில்?

அந்த நாள் காதல் கதைகளில் சொல்லுவார்கள். ஒரு ராஜ குமாரன் தன் காதெலியைக் காண, அந்தப்புரத்தின் உயர்ந்த மதில் சுவற்றைத் தாண்டிட உடும்பின் இடுப்பில் கயிற்றினைக் கட்டி அதைத் தூக்கி சுவற்றின் மீது எறிந்து அது கெட்டியாகச் சுவற்றைப் பிடித்துக் கொள்ள கயிற்றைய்ப் பிடித்துக் கொண்டு அவன் சுவற்றின் மீது ஏறினான் என்று. உடும்பின் கால்களும் அதன் கூரிய நகங்களும் அவ்வளவு வலுவானவை.

உடும்பு (இதை ஆங்கிலத்தில் Monitor lizard என்று அழைப்பார்கள்) ஊர்வனவான பல்லி, ஒணான், முதலை இனத்தைச் சேர்ந்தது. உடும்புகளில் சுமார் நூறு வகையான உடும்புகள் உள்ளன. சுமார் 8 அங்குல (20 சென்டி மீடர்) நீளமுள்ள உடும்பில் இருந்து பத்தடி (3 மீட்டர்) வரை நீளமுள்ள உடும்பு இனங்கள் வரை உள்ளன.

Inline image 3

(பத்தடி நீளமுள்ள கொமோடோ ட்ரேகன்-படம் விக்கிபீடியா தளத்தில் இருந்து)

உடும்பின் நாக்கு பாம்பின் நாக்கினைப் போன்றே நுனியில் பிளந்திருக்கும். அவ்வப்போது நாக்கை வெளியே துருத்தி இந்தப் புறமும் அந்தப் புறமுமாக ஆட்டிப் பின் உள் இழுத்துக் கொள்ளும். இது அப்படிச் செய்வது பாம்பினைப் போலவே தன் இரை சென்றதை நுகர்ந்து கண்டறிவதற்காக இருக்கலாம். அல்லது மணம் செய்திடத் தக்க பெண் அவ்வழிச் சென்றிருக்கிறாளா என்பதைக் கண்டறிவதற்காக இருக்கலாம்.

உடும்பு என்னும் பிராணி, ஓணான், பல்லி இவற்றின் இனத்தைச் சேர்ந்தாலும் இவற்றின் இல்வாழ்க்கை அவற்றைப் போல பலாத்கார வாழ்க்கை அல்ல. இன்பக் காதல் வாழ்க்கை.

அரணை போன்றே, ஆண் உடும்பு பெண் உடும்பின் கூடவே சென்றிடும். பெண் உடும்பு சற்று ஓய்வெடுத்தால் ஆண் உடும்பு பெண் உடும்பின் உடலருகேயே தானும் படுத்துக் கொண்டு தலையோடு தலை வைத்துக் கொள்ளும். அவ்வப்போது நாவினால் பெண்ணின் கழுத்தையும் தலையையும் நக்கிக் கொடுக்கும். (முத்தம் கொடுத்திடுதோ?) மனையாள் இசைந்த பின் புணரும், பின் சில நாட்களுள், பெண் உடும்பு இரண்டு மூன்றடி ஆழமுள்ள ஒரு குழி தோண்டி அதனுள் சுமார் இருபத்தி ஆறு முட்டைகள் வரை இட்டு. குழியை மண்ணால் மூடி விடும். முட்டைகளில் உள்ள கரு முதிர்ந்து குட்டியான உடன் அவை மண்ணைத் தள்ளிக் கொண்டு வெளியேறிடும்.

உடும்புகளை வீட்டில் வளர்ப்பவர்களும் உண்டு. கீழுள்ள படத்தில் ஒருவர் தான் வளர்த்த உடும்பின் காயத்திற்கு வைத்தியம் செய்திட அதை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்வதைப் பாருங்கள்.

Inline image 4

(உடும்புக்கு வைத்தியம் - படம் விக்கிபீடியா இணைய தளத்தில் இருந்து)

உடும்பின் தோல் உடம்போடு ஒட்டிடாமல் இருக்கும் ஒன்று போலத் தோன்றும். கமலா ஆரஞ்சுக்கும் சாத்துக் குடிக்கும் வித்தியாசம் தெரியுமல்லவா உங்களுக்கு? முன்னதன் தோல் சுளையோடு ஒட்டிடாமல் இருக்கும். அந்த ஆரஞ்சின் மற்றொரு பெயர் “கமலா லூஸ் ஜேக்கெட்” என்பதாகும். அது போலத்தான் உடும்பின் தோலும் உடம்போடு ஒட்டிடாத ஒன்று போலத் தோன்றும் கைகளில் உடும்பை எடுத்துப் பார்க்கும் போது.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் ரோமுலஸ் விட்டாக்கரின் சொந்த பாம்புப் பண்ணைக்குச் சென்ற போது நடந்த ஒன்று நினைவுக்கு வருகிறது. அவர் ராஜஸ்தான் பாலைவன ஓணான் ஒன்றை என் கையில் எடுத்துக் கொடுத்தார். எனக்கு ஒரு கணம் பயம் வந்து விட்டது அந்த ஓணான் என் கையில் தன் தோலைக் கழற்றிக் கொடுத்து விட்டு ஓட முயற்சிக்கிறதோ என்று பயத்தில் அங்கிருந்த ஒரு கள்ளிச் செடியில் அதை விட்டு விட்டுப் படம் பிடித்தேன்.

Inline image 5

(பாலைவனத்து ஓணான் – படம் ந.க.)


உடும்புகளின் உணவு பூச்சிகள், புழுக்கள், பறவைகள், சிறிய மிருகங்களில் இருந்து காட்டுப் பன்றி, மான், எருமை வரை தங்கள் உடல் அளவு, சக்தி இவற்றுக்கேற்ற வாறு.

உடும்புகள் யாருக்கு உணவு? சந்தேகமே வேண்டாம். மனிதனுக்குதான். உடும்பு மாமிசம் உண்டால் ஆணின் வீரியம் அதிகரிக்கும் என்பது தென் இந்தியா மற்றும் மலேசியாவில் பரவலாக நம்பப் படும் ஒன்று. இந்த ஒரு காரணம் போதுமே உடும்பின் அதி வேக மறைவிற்கு.

‘உடும்புத் தைலம்’ மூட்டு வலிக்கு மருந்து’ என்று சொல்வோரும் உண்டு. சிற்றூர் சந்தைகளில் சில ஆதி வாசிகள், நரிக் குறவர்கள் போன்றவர்கள் கடை பரப்புவதைப் பார்த்திருப்பீர்களே. அவற்றில் உடும்பு உப்புக் கண்டம், உடும்புத் தைலம் இவை வெகு வேகமாக விற்பனை ஆவதையும் பார்த் திருக்கலாம் நீங்கள்.

நம் நாட்டில் உடும்பினை பூஜை செய்பவர்களும் உண்டு. வட இந்தியாவில் சில இடங்களில் நாக பஞ்சமி தினத்தன்று பெரிய உடும்புகளுக்கு மஞ்சள் குங்குமம் பூசி, மூங்கில் கட்டைகளில் கட்டித் தூக்கிச் செல்வோரின் படங்களை பத்திரிகைகளிலும், தொலைக் காட்சியிலும் நான் பார்த்திருக்கிறேன்.

நம் பின் வரும் சந்ததிகளுக்கு உயிருள்ள உடும்பினைக் காட்டிட வேண்டும் என்றால் உடும்பு பற்றிய தவறான எண்ணங்கள் மக்கள் மதிதியில் இருந்து மறைய வேண்டும். அதற்கு நாம் நம்மாலான சிறு துரும்பையாவது நகர்த்திடல் வேண்டும். செய்வோமா? அதற்கு முதல் அடி தான் இந்தக் கட்டுரை.

நடராஜன் கல்பட்டு

No comments:

Post a Comment